சென்னை மெரினா கடற்கரையில் இருக்கும் சுந்தரி என்பவரின் தள்ளுவண்டி கடை மிக பிரபலமானது. தொடர்ச்சியாக வரும் வாடிக்கையாளர்கள் அனைவரும் அவரை அக்கா.. அக்கா என்று அழைத்து நாளடைவில் 'சுந்தரி அக்கா கடை' என்பதே கடையின் பெயரானது.

சென்னை மெரினாவில் இருக்கும் உழைப்பாளர் சிலைக்கும் நீச்சல் குளத்திற்கும் இடையில் இவரது கடை இருக்கிறது. மீன், மட்டன் என பலவகையான அசைவ உணவு குறைந்த விலையில் தரமாகவும் இவர் கடையில் கிடைப்பதால் வாடிக்கையாளர்கள் கூட்டம் அங்கு அலை மோதும்.

இந்தநிலையில் சுந்தரியின் உணவு கடைக்கு தற்போது அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையிடம் இருந்தும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் இருந்து இவரது கடைக்கு பாதுகாப்பான உணவை வழங்குவதற்கான அங்கீகாரச் சான்றிதழை அரசு வழங்கி இருக்கிறது. அந்த சான்றிதழில் 'மிகவும் தரமான கடை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்ப அதிர்ச்சி அடைந்த சுந்தரி, இந்த அங்கீகாரத்தை தனது வாடிக்கையாளர்களுக்கு சமர்பிப்பதாக தெரிவித்துள்ளார். சுந்தரியின் இந்த செயல் வாடிக்கையாளர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

இதுபோன்ற சான்றிதழ்கள் உணவுகளின் தரம் மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதாக வாடிக்கையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.