சென்னை ஆவடி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுடன் இளம்பெண் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை ஆவடி பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி இவர் அரசு மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 பெண் குழந்தை உள்ளது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி விஜயலட்சுமி கணவரிடம் கோவித்து கொண்டு தாய் வீட்டிற்கு செல்வதற்காக குழந்தைகளுடன் சென்றார்.  

ஆனால், மன வருத்தத்தில் இருந்த விஜயலட்சுமி தாய் வீட்டிற்கு செல்லாமல் குழந்தைகளுடன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், 3 பேரும் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். தாய் வீட்டிற்கு செல்லாத மனைவியை கணவர் இரவு முழுவதும் தேடியுள்ளார். 

இந்நிலையில், இன்று காலை ரயில் தண்டவாளத்தில் 3 சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ரயில் மோதி உயிரிழந்தார்களா? அல்லது தற்கொலையா என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.