சென்னை அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்துக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. இதுவரை சென்னையில் மட்டும் 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் உயிரிழந்துள்ளனர்.  சென்னையில் ஊரடங்கை மதிக்காமல் கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியே சுற்றி திரிவதால் கொரோனா தீவிரமாக பரவுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனையடுத்து, சென்னையில் வாகன தணிக்கையை தீவிரப்படுத்த போலீசாருக்கு தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் போக்குவரத்து நெரிசலுடன் பரபரப்பாக இயங்கும் சென்னை அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. அண்ணா மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி, வாலாஜா சாலை சிக்னல் வரை முழுவதும் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்குப் பிறகு ஆம்புலன்ஸ் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி இல்லை என கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரித்த போது மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக  மாநகர காவல்துறை இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.