பேனர் விழுந்து லாரி ஏறி இறங்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சுபஸ்ரீ, கனடா செல்வதற்காக எழுதியிருந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை குரோம்பேட்டை பவானி நகரைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ. கடந்த 12-ம் தேதி துரைப்பாக்கத்தில் தனது பணியை நிறைவு செய்துவிட்டு மதியம் துரைபாக்கம் - பல்லாவரம் சாலை வழியாக வீட்டுக்குத் திரும்பினார். பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையைத் தாண்டி சுபஸ்ரீ இரு சக்கர வாகனத்தில் வந்தபோது அந்தப் பகுதியில் சென்டர் மீடியனில் வைக்கப்பட்டிருந்த அதிமுக வரவேற்பு பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது.

 
இதில் நிலை தடுமாறி சாலையில் சுபஸ்ரீ கீழே விழுந்தார். அப்போது சுபஸ்ரீக்கு பின்னால் வந்துகொண்டிருந்த லாரி, அவர் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார். இந்தச் சம்பவம் தமிழகம் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக சென்னை நீதிமன்றம் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துவருகிறது.
இதற்கிடையே சுபஸ்ரீ பற்றிய ஒரு தகவல் இன்று வெளியாகி உள்ளது. சுபஸ்ரீ மரணமடைவதற்கு முன்பாக, கனடா செல்லும் முயற்சியில் இருந்தார். தனது குடும்பத்தை முன்னேற்றும்விதமாக இந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தார். இதற்காக நடத்தப்பட்ட தேர்வையும் அவர் எழுதியிருந்தார். அந்தத் தேர்வு முடிவு தற்போது வெளியாகி உள்ளது. தேர்வில் முதல் வகுப்பில் சுபஸ்ரீ தேர்ச்சி பெற்றிருப்பதாக அவருடைய தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


கனடா செல்வதைக் கனவாக நினைத்திருந்த சுபஸ்ரீ, பேனர் விழுந்து, உயிரிழக்காமல் இருந்திருந்தால், இத்தேர்வு முடிவு அவரை மகிழ்ச்சியின் உச்சத்துக்குக் கொண்டு சென்றிருக்கும். அடுத்த சில மாதங்களில் கனடாவுக்கு சுபஸ்ரீ சென்றிருப்பார். ஆனால், சாலையில் விழுந்த பேனர் அவருடைய கனவை மட்டுமல்ல, அவருடைய பெற்றோர் கனவிலும் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.