சென்னையில் பேனர் சரிந்து சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் கைதான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் அதிமுக பிரமுகர் ஜெயகோபாலின் இல்ல விழாவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனா் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குரோம்பேட்டையைச் சோ்ந்த இளம்பெண் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில், நிலை தடுமாறி கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீா் லாரி மோதியது. இந்த விபத்தில் சுபஸ்ரீ சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.  

இந்த சட்டவிரோத பேனர் விவகாரத்தை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு, காவல்துறை, சென்னை மாநகராட்சிக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது. இதனையடுத்து, தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை செப்டம்பர் மாதம் 27-ம் தேதி கைது செய்தனர். ஜெயகோபாலின் உறவினர் மேகநாதன் என்பவரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனிடையே இந்த வழக்கில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் மற்றும் அவரது உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். ஜாமீன் தொடர்பான வழக்கு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்த போது ஜெயகோபால் மற்றும் அவரது உறவினரான மேகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. ஏழை நோயாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் மதுரையில் தங்கி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.