சென்னை பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த சுபஸ்ரீ வழக்கில், பேனர் வைத்த அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. 
கடந்த செப்டம்பர் 12 அலுவலகப் பணியை முடித்து விட்டு குரோம்பேட்டையில் உள்ள வீட்டுக்கு பல்லாவரம் - துரைபாக்கம் ரேடியல் சாலையில் இரு சக்கர வானகத்தில் சுபஸ்ரீ சென்றார். மதியம் 2.50 மணி அளவில் பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனையைத் தாண்டி வந்தபோது, சென்டர் மீடியனில் கட்டப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் நிலைத்தடுமாறிய சுபஸ்ரீ, இருசக்கர வாகனத்துடன் சாலையில் விழுந்தார். அப்போது அவர் பின்னால் வந்துகொண்டிருந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி சுபஸ்ரீ பலியானார். 
இந்த விபத்துக்கு அதிமுக பிரமுகர் ஜெயகோபால், தனது இல்லத் திருமணத்துக்காக வைத்த பேனர்தான் முக்கிய காரணம் என்று நேரில் பார்த்த பலரும் தெரிவித்தார்கள். பின்னர் சிசிடிவி காட்சிகள் வெளியான பிறகு ஜெயகோபால் வைத்த பேனர்தான் சுபஸ்ரீயின் மரணத்துக்கு காரணம் என்பது உறுதியானது. இந்த வழக்கில் சிசிடிவி காட்சி முக்கிய தடயமாக இருக்கிறது. இந்த வழக்கில் பேனர் வைத்த ஜெயகோபால் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ஆனால், அவரை விசாரணைக்கு அழைத்து போலீஸார் விசாரணை  நடத்தாமல் இருந்தனர். 
இந்நிலையில் திடீரென ஜெயகோபால், நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஜெயகோபால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று போலீஸ் தரப்படுகிறது. ஜெயகோபால் தலைமறைவாக உள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கை மவுண்ட் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரித்துவருகிறார்கள். இதற்கிடையே ஜெயகோபாலை கண்டுபிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கில் லாரி டிரைவர் மனோஜை அன்றைய தினமே போலீஸார் கைது செய்தனர். இதேபோல விபத்து நடக்க முக்கிய காரணமாக இருந்த பேனரை பிரிண்ட் செய்த கடைக்கு அடுத்த நாளே மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஆனால், பேனர் வைத்த ஜெயகோபால் மீது மட்டும் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.