அண்மையில் இயற்றப்பட்ட குடியுரிமை சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தீவிர போராட்டங்கள் நடந்து வருகின்றன. டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து பல மாணவர்கள் தாக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் தற்போது மாணவர் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களாக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஜனவரி 2 வரை மாணவர்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவு விடப்பட்டுள்ளது. ஆனாலும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். நேற்று 80 க்கும் மேற்பட்ட போலீசார் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாணவர்களை கலைந்து போக அறிவுறுத்தினர். அதை ஏற்க மறுத்த மாணவர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை கலைந்து போக மாட்டோம் என கூறியுள்ளனர்.

பல்கலைக்கழக வளாகத்திற்குள் வெளியாட்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. நேற்று இரவில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்திய நிலையில் இன்று காலையிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழகத்தின் வெளியேயும் கூட்டமாக இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.