#BREAKING புத்தகம் பார்த்து பொறியியல் தேர்வு எழுதலாம்... ஆன்லைன் தேர்வில் அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி மாற்றம்!
இதை எல்லாம் கருத்தில் கொண்டு மே மாதம் நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வில் பல அதிரடி மாற்றங்களை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது
கொரோனா பரவல் காரணமாக அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் என தமிழக அரசு அறிவித்திருந்தது. தமிழக அரசின் ஆல் பாஸ் அறிவிப்பு தங்களின் விதிமுறைகளுக்கு எதிரானது எனப் பல்கலைக்கழக மானியக் குழுவும், அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலும் தெரிவித்தது. இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசின் 'அரியர் ரத்து' அறிவிப்பை ஏற்க முடியாது, அடுத்த எட்டு வாரங்களுக்குள் அரியர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தி முடிக்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்துக்குட்பட்ட பொறியியல் கல்லூரிகளுக்கு 2020ம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் மாதங்களில் நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள், இந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மார்ச் 2 வரை நடத்தப்பட்டன. இரண்டாம் ஆண்டு, மூன்றாம் ஆண்டு, இறுதியாண்டு மாணவர்கள் சுமார் 4 லட்சம் பேர் தேர்வினை எழுதினர். கடும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்ட இந்த ஆன்லைன் தேர்வு முடிவுகள் கடந்த ஏப்ரல் 11ம் தேதி வெளியானது, இதில் 60 சதவீத மாணவர்கள் தோல்வி அடைந்தனர். மேலும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஏராளமான மாணவர்களது முடிவுகள் நிறுத்திவைக்கப்பட்டது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு மே மாதம் நடைபெற உள்ள ஆன்லைன் தேர்வில் பல அதிரடி மாற்றங்களை அண்ணா பல்கலைக்கழகம் செய்துள்ளது. பாடங்களில் இருந்து நேரடி கேள்விகளுக்கு பதிலாக, பாடங்களைப் புரிந்து கொண்டு பதிலளிக்கும் வகையிலான விளக்க வகை கேள்விகள் கேட்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவெடுத்துள்ளது. இறுதி செமஸ்டர் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு மட்டும் பழைய நடைமுறையில் வினாத்தாள் இருக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மேலும் இந்த புதிய முறையில் நேரடி பதில்கள் கிடைக்காது என்பதால் மாணவர்கள் தேர்வின் போது புத்தகம் மற்றும் இணையதளங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறை அடுத்த மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வுகளின் போதே நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.