திருவள்ளூர் அருகே மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுச்சேரி பகுதியில் உள்ள புத்தேரியில், மருத்துவ கழிவுகளை கொட்டியவர்கள் மீது நடவடிக்கைக்கோரி அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி - பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 4 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் அடுத்த மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்டது மேட்டுச்சேரி கிராமம். இந்த கிராமத்தில் புத்தேரி உள்ளது. இந்த ஏரியின் நிலத்தடிநீர் மூலம், போர்வெல் அமைத்து, மப்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட மப்பேடு, மேட்டுச்சேரி, சமத்துவபுரம், மப்பேடு காலனி உட்பட 8 கிராமங்களுக்கு மேல்நிலை குடிநீர் தேக்கத்தொட்டி மூலம் குடிநீர் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் மருத்துவ கழிவுகளை கொண்டுவந்து ஏரிக்குள் கொட்டுகின்றனர். இதனால், நிலத்தடிநீர் மாசுபடுவதோடு, கிராம மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயநிலை உள்ளது. மேலும், ஏரியில் இருக்கும் தண்ணீரை குடிக்கும் காலனடைகளும் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து மேட்டுச்சேரி கிராம மக்கள் பலமுறை மாவட்ட கலெக்டர் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவும் சிலர் வாகனத்தில் வந்து மருத்துவ கழிவுகளை ஏரிக்குள் கொண்டுவந்து கொட்டியுள்ளனர்.

இதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 500க்கும் மேற்பட்டோர் பூந்தமல்லி - பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில், மேட்டுச்சேரி அருகே திடீரென நேற்று காலை 7 மணிக்கு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன.

தகவலறிந்து திருவள்ளூர் டிஎஸ்பி கங்காதரன் தலைமையில், மப்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அரசு தரப்பில் வருவாய்த்துறை மற்றும் ஒன்றிய அதிகாரிகள் வந்து பதில் கூறினால்தான் கலைந்து செல்வோம் என பொதுமக்கள் கூறினர்.

இதனால், 4 மணி நேரமாக மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்தது. பின்னர் அதிகாரிகள் வந்து சமரச பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், பூந்தமல்லி - பேரம்பாக்கம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து 4 மணி நேரமமாக கடுமையாக பாதிக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.