காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் அத்தி வரதர் வைபவம் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அத்திவரதர் வைபவத்துக்காக இரவும் பகலும் சிறப்பு பேருந்துகளை இயக்கி வரும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதுகுறித்து தொழிலாளர்கள் தெரிவித்தாவது: போக்குவரத்துத் துறையில் காஞ்சிபுரம் மண்டலத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து முக்கியஸ்தர்கள், விஐபிக்களுக்கு வழங்கும் டோனர் பாஸ் 600 மற்றும் விவிஐபிக்களுக்கு வழங்கும் சிறப்பு அனுமதி அட்டை 50 வாங்கி வந்துள்ளார்.

இந்த பாஸை ஒரு தொழிலாளருக்கும் வழங்காமல் தனது சொந்த செல்வாக்கினை உயர்த்தி கொள்ளும் விதமாக தனது உறவினர்களுக்கும்,பிற துறை அதிகாரிகளுக்கும் வழங்கி உள்ளார். சிறப்பு பணி செய்யும் நாங்கள் அத்திகிரி வரதரை குடும்பத்துடன் தரிசனம் செய்ய முடியவில்லை.

எனவே, சிறப்புப் பணி செய்யும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்களான ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், அலுவலர்களுக்கு சிறப்பு அனுமதி அட்டை வழங்க வேண்டும். இல்லெயென்றால் குடும்பத்துடன் போராட்டம் நடத்துவோம் என தொழிலாளர்கள் தெரிவித்தனர்.