தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்ட நிலையில் 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. இதில், முன்பதிவு செய்யப்பட்ட பயணிகளுக்கான பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. 

கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பேருந்து, ரயில் சேவை உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து சேவைகளும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது பொது போக்குவரத்து சேவை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

இதனால் தமிழகத்தில் ரயில்களை இயக்க வேண்டும் என தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்ததன் பேரில், 13 கொரோனா கால சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சென்னையில் இருந்து கோவை, மதுரை, திருச்சி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, காரைக்குடி உள்ளிட்ட வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டன.

இதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவும் தொடங்கி ஒரு சில ரயில்களை தவிர மற்ற ரயில்களில் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்து விட்டது. இந்த ரயில்கள் அனைத்திலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் மட்டும் இடம் பெற்றுள்ளன. முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் ரயில் நிலையங்களில் வழங்கப்படாது. மேலும் ரயில் நிலையத்தில் பயணிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் தெற்கு ரயில்வே வெளியிட்டது.