கிளாம்பாக்கம் செல்ல ஈசியான வழி இதுதான்! மின்சார ரயில் சேவையை விரிவுபடுத்தும் தெற்கு ரயில்வே
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் விதமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முதல் இரவு நேரங்களிலும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பிரம்மாண்டமாக இருந்தாலும் சென்னையில் பல பகுதிகளில் இருந்து அங்கு செல்வதற்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமான அளவு இல்லை என பயணிகளின் குறை சொல்லி வருகின்றனர். சென்னையின் மையப் பகுதியில் இந்தப் பேருந்து நிலையத்தை அமைத்திருந்தால் அனைத்து தரப்பினரும் வந்து செல்ல வசதியாக இருந்திருக்கும் எனவும் பலர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து கன்னியாகுமரி, மதுரை, தூத்துக்குடி, நெல்லை, திருவண்ணாமலை, திருச்சி, செங்கோட்டை, விழுப்புரம், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கிளம்பாக்கத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல வசதியாக வண்டலூர் அருகே புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணியிடம் இருந்து ரூ.1.57 கோடி வெளிநாட்டு கரன்சி பறிமுதல்
இச்சூழலில் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். "கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் வேகமாகவே நடக்கின்றன. அடுத்த சில மாதங்களில் ரயில் நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துவிடும்" என்றார்.
மேலும், "கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்லும் பயணிகளின் சிரமத்தை குறைக்கும் வகையில், பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்கும் விதமாக சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் 5 மின்சார ரயில்கள் திங்கள்கிழமை முதல் கூடுவாஞ்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன" எனக் கூறினார்.
இதைப்பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கடற்கரையில் இருந்து இன்று முதல் இரவு 7.19, 8.15, 8.45, 8.55, 9.40 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் வரை செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.45, 10.10, 10.25, 11.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும்.
மார்ச் முதல் ஞாயிற்றுக்கிழமை தோறும் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 7.20, 8.20, 8.40, 9.00, 9.50 ஆகிய நேரங்களில் புறப்படும் தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும். மறுமார்க்கமாக, இந்த ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து இரவு 8.55, 9.50, 10.10, 10.35, 11.20 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வந்தடையும். இவ்வாறு ரயில்வே கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உலகத் தரத்தில் 34 ரயில் நிலையங்கள்! பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!