சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி. இந்த தம்பதியினருக்கு ராஜன், டேவிட் என இரண்டு மகன்கள் பிறந்துள்ளனர். குடும்பத்தில் நிலவிய வறுமை காரணமாக கடந்த 1976 ம் ஆண்டு தனது மகன்களுடன் அங்கிருக்கும் ஒரு காப்பகத்தில் சென்று தனலட்சுமி தங்கியுள்ளார். பின்னர் மற்ற குழந்தைகள் ஏக்கம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக மகன்களை காப்பகத்தில் விட்டுவிட்டு தனலட்சுமி வெளியேறி விட்டார். அவ்வப்போது போய் பார்த்து மட்டும் வந்துள்ளார்.

இதனிடையே டென்மார்க்கில் இருந்து தமிழகம் வந்திருந்த தம்பதியினர் இருவரையும் தத்தெடுத்து சென்றுள்ளனர். அதன்பிறகு அவர்கள் அனுப்பிய டேவிட்டின் புகைப்படம் மட்டுமே தனலட்சுமியிடம் இருந்துள்ளது. இதற்கிடையில் தான் தத்தெடுக்கப்பட்ட விபரம் டேவிட்டிற்கு தெரிய வந்துள்ளது. அதன்பிறகு தன்னை பெற்றெடுத்த தாயை பார்க்க விரும்பி கடந்த 2013 ம் ஆண்டு தமிழகம் வந்துள்ளார். சென்னை உட்பட தமிழகத்தின் பல இடங்களிலும் தேடி பார்த்துள்ளார். ஆனாலும் தனது தாயை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் தனது விபரங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு தாயை தேடி வந்தார். அதைப்பார்த்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று அவருக்கு உதவ முன்வந்தது. கடந்த ஆறு வருடங்களாக அந்த அமைப்பின் உதவியுடன் தனது தாயை டேவிட் தீவிரமாக தேடிக்கொண்டிருந்தார். அதற்கு பலனாக தனலட்சுமி மணலியில் வசிப்பது தெரிய வந்தது. சுமார் 40 வருடங்களுக்கு பிறகு முதன்முதலாக தனது தாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் வீடியோ கால் மூலமாக பேசினார்.

இந்த நிலையில் தனலட்சுமியை நேரில் சந்திப்பதற்காக நேற்று முன்தினம் மாலை டேவிட் தமிழகம் வைத்தார். இரண்டு வயதில் கைக்குழந்தையாக பார்த்த மகனை 42 வயது வாலிபராக பார்த்த தனலட்சுமி உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் விட்டு கதறி அழுதார். தாயை கட்டியணைத்து டேவிட்டும் அழுதார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் கலங்கச் செய்தது. டேவிட்டிற்கு சுத்தமாக தமிழ் தெரியவில்லை. இதனால் மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் தாயிடம் பேசி வருகிறார்.

இதனிடையே டென்மார்க்கில் வசிக்கும் தனது அண்ணனையும் விரைவில் அழைத்து வர இருப்பதாக தாயிடம் டேவிட் கூறியுள்ளார். 40 வருடங்களுக்கு பிறகு ஒன்றிணைந்திருக்கும் தாயும் மகனும் மட்டுமில்லாது உறவினர்களும் நெகிழ்ச்சியில் இருக்கின்றனர்.