சென்னையில் மகன் திருமணம் நாளை நடைபெற இருந்த நிலையில் மது அருந்தியதை கண்டித்ததால் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை திருவொற்றியூர் காட்டு பொன்னியம்மன் நகரை சேர்ந்தவர் மோகன் (70). இவரது மகன் செந்திலுக்கு நாளை திருமணம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளில் இரு குடும்பத்தினரும் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் வைத்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்த மோகன், போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த அவரது மனைவி, மகன் திருமணத்தை வைத்துக்கொண்டு மது அருந்துகிறீர்களே என்று திட்டியுள்ளார். இதில் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோகன், வீட்டின் அறையில் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மோகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.