சீன நாட்டில் பரவத்தொடங்கிய கொடூர கொரோனா வைரஸ் தற்போது உலகில் இருக்கும் 198 நாடுகளில் பரவி இருக்கிறது. இதுவரையில் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயரும் நிலையில் ஒட்டுமொத்த உலகமும் கொரோனா வைரஸால் நிலைகுலைந்து போயிருக்கிறது. உலக பொருளாதாரமும் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் தனது கொடூர முகத்தை காட்டத் தொடங்கியுள்ளது. இதுவரையில் 906 பேர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு தனிமை சிகிச்சையில் இருக்கின்றனர். 20 பேர் பலியாகி உள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் மலேரியாவிற்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவிற்கு பரிந்துரைத்திருந்தார். இந்திய மருத்துவ கவுன்சிலும் மலேரியாவுக்கு பயன்படுத்தும் மருந்தை தடுப்பு மருந்தாக உபயோகிக்கலாம் என்று பரிந்துரை செய்தது. எனினும் அது முழுமையாக நிரூபிக்கப்படவில்லை.

கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வர 12 முதல் 18 மாதங்கள் வரை ஆகலாம் என்று மருத்துவ உலகம் கூறுகிறது. இப்படி ஒட்டுமொத்த உலகமும் கொரோனாவிற்கு மருந்து இல்லாமல் திணறி வரும் நிலையில் தமிழகத்தின் ஒரு கிராமத்தில் கொரோனாவை எதிர்த்து எந்திரம் கட்டப்படுவதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனவா வைரஸை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கு எந்திரம் கட்டப்படும் என்றும் அவ்வாறு மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள விரும்பினால் கீழே குறிப்பிட்டிருக்கும் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. 

உலகமே கொரோனவால் சிதைந்து போயிருக்கும் நிலையில் சூரியனுக்கே டார்ச் என்கிற ரீதியில் கொடூர கொரோனவை கட்டுப்படுத்த எந்திரம் கட்டப்படும் என்று வெளியிடப்பட்டிருக்கும் விளம்பரம் மக்களிடையே திகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.