பொது இடத்தில் தம் அடித்ததால், போலீசார் பிரபல திரைப்பட ஹீரோவுக்கு அபராதம் விதித்தனர். இதையடுத்து படத்தின் டைரக்டர், ரூ.200 அபராதம் கட்டினார். இச்சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அபராதம் வசூலிக்க வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க சார்மினார்  பகுதியை ஏராளமான சுற்றுலா பயணிகள், பார்த்து ரசித்து வருகின்றனர். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கானோர் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

மேலும், பல்வேறு மொழி திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளும் அங்கு எடுக்கப்படுகிறது. பலத்தரப்பட்ட மக்கள் வந்து செல்லும் பகுதி என்பதால், அங்கு புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடத்தப்பட்டது இதில், பிரபல நடிகர் ராம் பொதினேனி, படப்பிடிப்பின் இடைவேளையில், சிகரெட் பிடித்துள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை மடக்கி பிடித்தனர்.

பின்னர், பொது இடத்தில் புகை பிடித்ததாக போலீசார், அவருக்கு அபராதம் விதித்தனர். மேலும், அதற்கான ரசீதை அவரிடம் கொடுத்தனர். இதைகண்ட படத்தின் டைரக்டர், அங்கு சென்று, போலீசாரிடம் இருந்து அபராத ரசீதை பெற்று கொண்டு, ரூ.200 தொகையை அவரிடம் கொடுத்து அனுப்பினார்.