இந்தியாவிலேயே தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி செய்து மற்ற மாநிலங்களுக்கு வழங்கும் இரண்டு மாநிலங்கள் தமிழகம் மட்டும் கேரளா தான்.

கொரோனா 2வது அலை தீவிரமாகியுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தென் மாநிலங்களை பொறுத்தவரை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஆக்சிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்பதூர் ஆலையில் இருந்து 45 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிற்கு கொண்டு செல்ல மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதலை பெறாமல் மத்திய அரசு கட்டாயமாக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மத்திய அரசின் இந்த முடிவிற்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை தேவைக்கு அதிகமாகவே ஆக்சிஜன் உற்பத்தி இருப்பதாகவும் மத்திய அரசு கட்டாயப்படுத்தாத நிலையில் தேவைப்படும் மாநிலங்களுக்கு தமிழக அரசே ஆக்சிஜனை அனுப்பி வருவதாகவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உபரி ஆக்சிஜனை வழங்க தமிழக அரசே தயாராக உள்ள நிலையில் மத்திய அரசு கட்டாயப்படுத்தி 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை ஆந்திரா, தெலுங்கானாவிற்கு அனுப்பி வைக்கும் முடிவு குறித்து தொடர்புடைய அதிகாரிகளுடன் பேசப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை எப்படி அனுப்பலாம் என்று சிலர் கேள்விகளை எழுப்ப ஆரம்பித்துள்ளனர். ஆனால் உண்மையில் தமிழகத்தில் தற்போதைய சூழலில் 400 மெட்ரிக் டன் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் உற்பத்தியாகும் ஆக்சிஜனில் 1200 மெட்ரிக் டன்னை மட்டுமே தமிழ்நாட்டில் சேமித்து வைக்கும் கெபாசிட்டி உள்ளது. எனவே மூன்று நாட்கள் முழுமையாக உற்பத்தி நடைபெற்றால் அதன் பிறகு உற்பத்தியாகும் ஆக்சிஜனை சேமித்து வைக்க தமிழகத்தில் போதுமான கட்டமைப்பு இல்லை. அதே சமயம் தமிழகத்தில் ஒரு நாளைக்கு வெறும் 200 டன் அளவிற்கு மட்டுமே மருத்துவ ஆக்சிஜன் தற்போதைக்கு தேவையாக உள்ளது.

எனவே தமிழகத்தின் தேவையை  போக அதிகபட்ச்மாக 1200 டன் அளவிற்கு மட்டுமே இங்கு சேமித்து வைக்க முடியும். ஆதலால் தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை தற்போதைய சூழலில் அண்டை மாநிலங்களுக்கு அனுப்புவதால் எந்த பிரச்சனையும் ஏற்படப்போவதில்லை.