சென்னை மாநகராட்சியில் தலைமைப் பொறியாளர் உள்பட 35க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் பொதுமக்கள் மத்தியில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை சென்னையில் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக செங்கல்பட்டு, திருவள்ளூர், விருதுநகர், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு  ஜெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

முக்கியமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், அரசியல் வாதிகள் இந்த தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மாநகராட்சியில் பொறியாளர்கள் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது வரை பொதுத்துறை தலைமை பொறியாளர் நந்தக்குமார் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட பொறியாளர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிக்கப்பட்ட வீடுகள், தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் தகரம் அடிப்பது உள்ளிட்ட பணிகளை இந்தப் பொறியாளர்கள் மேற்கொண்டு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.