லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. முருகன் மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணை தெலங்கானாவிற்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் அவரின் உயரதிகாரியான ஐ.ஜி முருகன் மீது பாலியல் புகார் தெரிவித்தார். இதையடுத்து கூடுதல் டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையில் விசாகா கமிட்டி அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. பின்னர், அந்தக் கமிட்டி மாற்றியமைக்கப்பட்டு டி.ஜி.பி ஸ்ரீலட்சுமி பிரசாத் தலைமையில் புதிய கமிட்டி அமைக்கப்பட்டது. 

 மேலும், இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரிக்க வேண்டும் என விசாகா கமிட்டி பரிந்துரைத்துள்ளது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், விசாகா கமிட்டி விசாரணை நடத்தவும், அதேபோல் சி.பி.சி.ஐ.டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

 

விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி சார்பில் உயர் நீதிமன்றத்தில் புதிய மனு கடந்த பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பாலியல் குற்றச்சாட்டில் இருந்து ஐஜி முருகனை அமைச்சர்கள் காப்பாற்ற முயல்வதாகவும், இதனால், உயர் நீதிமன்றக் கண்காணிப்பில் புலன் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். மேலும், தமிழகத்தில் வழக்கை விசாரிக்கக்கூடாது எனவும் மனுவில் கூறியிருந்தார்.

 

இந்நிலையில், இந்த வழக்கு சென்னை உயர்நீதின்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்து 6 மாதத்தில் அறிக்கை அளிக்க தெலுங்கானா டி.ஜி.பி.க்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. வழக்கு தொடர்பான ஆவணங்களை தலைமைச் செயலாளர் உடனடியாக தெலுங்கானாவுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றுவதால் தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தமாகாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.