காஞ்சிபுரம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2-வது ஆலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். 

சென்னையில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியைப் போக்கும் வகையில் கடந்த 2003-2004-ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி என இரண்டு இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு வட சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்தக் குடிநீர்த் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்து வருகின்றது.

 

பருவமழை பொழித்து போனதால் கடும் வறட்சியின் பிடியில் சென்னை மக்கள் இருந்து வருகின்றனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் ஏரிகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், பல்வேறு இடங்களில் காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவையைப் போக்கும் வகையில், நெம்மேலியில் மேலும் ஒரு கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி நெம்மேலியில் கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் உற்பத்தி செய்யும் கடல்நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. புதிய ஆலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி, கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதன் கொள்திறன் 15 கோடி லிட்டர். இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1,689 கோடி ஆகும்.