காவல்துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்ப்பதற்காக அம்மா ரோந்து வாகன சேவையை கடந்த மாதம் முதல்வர் பழனிசாமி தொடங்கிவைத்தார்.

பெண்கள் தொடர்பான புகார்களுக்கு 1091 என்கிற எண்ணிற்கும், குழந்தைகள் தொடர்பான புகார்களுக்கு 1097 என்கிற எண்ணிற்கும் தொடர் கொண்டு தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 26 ம் தேதி தொடங்கப்பட்ட சேவைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தினமும் பல்வேறு அழைப்புகள் இந்த எண்களுக்கு வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த நிலையில் ரவுடி ஒருவரை பள்ளி மாணவி காதலிப்பதாக வந்த புகாரையும் அம்மா ரோந்து வாகன காவலர்கள் தீர்த்து வைத்துள்ளனர்.

சென்னை அருகே இருக்கும் திருவேற்காடு சேர்ந்தவர் ரேவதி. வயது 16 . (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அங்கிருக்கும் ஒரு பள்ளியில் 11 ம்  வகுப்பு படித்து வருகிறார். இவர் வசிக்கும் பகுதியில் இருக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்திருக்கிறார். அவர் ரவுடி என்று கூறப்படுகிறது.

அந்த வாலிபர் மீது கொலை, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களில் காவல்துறையின் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இதனால் அந்த வாலிபருடன் பழக கூடாது என்று அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். ஆனாலும் அவர்களின் பேச்சையும் மீறி மாணவி அந்த வாலிபருடன் சுற்றித்திரிந்து உள்ளார்.

இதனால் கவலை அடைந்த அந்த மாணவியின் தந்தை காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி காவல்துறையினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காவலர்கள் மூலமாக வந்த மாணவிக்கு அறிவுரை வழங்க முடிவு செய்தனர்.

இதனடிப்படையில் அம்மா ரோந்து வாகனத்தில் வரும் பெண் காவலர்கள் அந்த மாணவியை அழைத்து அந்த வாலிபரை காதலிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு கூறினர். அவர் மீது பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் இருப்பதாகவும் அறிவுரை வழங்கினர். அதை மாணவி ஏற்றுக்கொண்டார். சம்பந்தப்பட்ட வாலிபரை அழைத்த காவல்துறை அந்த மாணவியுடனான பழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று எச்சரித்து அனுப்பினர்.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிரச்சனைகளை அம்மா ரோந்து வாகனத்தில் வரும் காவலர்கள் உடனுக்குடன் போக்கி வருவது குறிப்பிடத்தக்கது.