முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமெரிக்கா, பிரிட்டனுக்கு செல்ல உள்ள நிலையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்துக்கு செல்ல உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு 28-ம் தேதி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அவருடன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, தொழில் துறை அமைச்சர் சம்பத், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஊரக தொழில்துறை அமைச்சர் பெஞ்சமின் உள்ளிட்டவர்கள், அத்துறையின் செயலாளர்கள், அதிகாரிகள் குழுவும் உடன் செல்கிறார்கள். மீண்டும் செப்டம்பர் 9-ம் தேதி அன்றுதான் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை திரும்ப உள்ளார்.


தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளைக் கவரவும், வெளிநாடுகளில் விவசாய மேம்பாட்டுப் பணிகள் எப்படி நடைபெறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று வெளி நாடுகளுக்கு செல்ல உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நாளை வெளிநாடு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
செங்கோட்டையன் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழு நாளை மறு நாள் பின்லாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கல்வியில் சிறந்த நாடாக பின்லாந்து விளங்கிவருகிறது. அந்த நாட்டில் கல்வி முறை எப்படி பின்பற்றப்படுகிறது, என்னென்ன கல்வித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்பது பற்றி அறிந்துகொள்ளவும் செங்கோட்டையன் செல்ல உள்ளதாக கூறப்பட்டுள்ளது.