சென்னை அருகே இருக்கும் செங்குன்றத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் நிதிஷ்(12). அந்த பகுதியில் இயங்கும் ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறான். பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்துள்ளான். நிதிஷ் வீட்டின் முன்பகுதியில் சுற்றுச்சுவருக்கும் தூணிற்கும் இடையில் சிறிய இடைவெளி இருக்கிறது. விளையாடிக்கொண்டிருந்த நிதிஷ் அதில் புகுந்து வெளிவர முயன்றிருக்கிறான்.

அப்போது எதிர்பாராத விதமாக தூணிற்கும் சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டு பரிதவித்தான். வெளிவர முடியாததால் பயந்து போன சிறுவன் கூச்சல் போட்டான். உடனடியாக சிறுவனின் பெற்றோர் வந்தனர். அவர்களாலும் நிதிஷை மீட்க முடியவில்லை. இதையடுத்து தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் சிறுவனை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

வீட்டின் சுற்றுச்சுவரை சுத்தியல் கொண்டு உடைத்தும் சிறுவனின் ஆடையை கத்திரிக்கோலால் வெட்டியும் அவனை வெளிக்கொண்டு வர முயன்றனர். நீண்ட நேரம் ஆனதால் சிறுவன் சோர்வடைந்து காணப்பட்டான். ஒருவழியாக இரண்டுமணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவன் மீட்கப்பட்டான். சோர்வாக இருந்த சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு சிறுவன் நலம் பெற்றான். வீட்டில் விளையாடும் போது கவனமாக இருக்க வேண்டும் என அவனுக்கு தீயணைப்பு துறை அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.