சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ராஜகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து ராஜகோபால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அப்போது அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 

இதனையடுத்து, உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து கடந்த 9-ம் தேதி நீதிபதியின் முன் அவர் ஆஜராகினார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததால் தனியார் மருத்துவமனையில் இருந்து நீதிமன்றத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாகதான் வந்தார். நீதிபதி அவரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். சிறைக்கு செல்லும் போதே அவருடைய உடல்நிலை பாதிக்கபட்டிருந்தது.

இதனால், ஸ்டான்லி மருத்துவமனையில் சிறை கைதிகளுக்கான வார்டில் ராஜகோபால் அனுமதிப்பட்டார். உடல்நிலை மோசமானதால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், கடந்த 6 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென நேற்று இரவு 11 மணியளவில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவரது உடல் நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து அவருக்கு வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் சிகிச்சை பெறும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.