தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்புகள் 26 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில், இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். மே 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டு வாரத்தில் பொது போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் முழுமையாக இரு வாரங்களுக்கு மூடப்படுகின்றன. அத்தியாவசிய தேவையான மளிகை, காய்கறி, பாலகங்கள், மருந்தகங்கள், விவசாயம் சார்ந்த கடைகள் போன்றவை மதியம் 12 மணி வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்றும், நாளையும் மட்டும் அனைத்து சலூன் கடைகளும் இயங்கலாம் என தமிழக அரசு அனுமதித்துள்ளது. முழு ஊரடங்கு திங்கட்கிழமை முதல் அமலாக உள்ள நிலையில், இன்றும், நாளையும் அனைத்து கடைகளும் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
