மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஏழு நாட்களுக்கான ஊதியம் அவர்களுக்கு  வழங்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  போராட்ட காலத்தில்  பணிக்கு வராத மருத்துவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து கணக்கெடுப்பு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது மருத்துவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் கடந்த ஒரு வார காலம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதனால் மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை கிடைக்காமல் அவதியுற்றனர். இதனையடுத்து. மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பணிக்கு திரும்புமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். ஆனாலும் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.  வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. 

 

அத்துடன்  60 மருத்துவர்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.  17 பி,  ஒழுங்கு நடவடிக்கை போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள்  மீது பாய்ந்தது.  அதில் பணி முறிவு, மற்றும் பணியிட மாற்றம் போன்ற  நடவடிக்கைகள் மருத்துவர்கள் மீது  எடுக்கப்பட்டது. உடனே போராட்டத்தை டாக்டர்கள் தற்காலிகமாக வாபஸ் வாங்கினார்.  போராட்டத்திலிருந்து விலகி பணிக்கு திரும்பியதால்,  பணி முறிவு நடவடிக்கையை மட்டும் ரத்து செய்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்தார். ஆனால் பணியிட மாற்றம்  தொடர்பாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.  பணியிட மாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருத்துவர்கள் கோரிக்கை வைத்தனர்.  இந்நிலையில் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட 7 நாட்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

போராட்டத்தின்போது யார்யாரெல்லாம் பணிக்கு வரவில்லை என்ற தகவல் சேகரிக்கப்பட்டு  வருவதாகவும் அவர்கள் எத்தனை நாட்கள் பணி புறக்கணிப்பு செய்தனர் என்ற விவரம் திரட்டப்பட்டு வருவதுடன், பணிக்கு வராத காலத்தை கணக்கிட்ட ஊதியம் வழங்கப்பட மாட்டாது என சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். இந்த  தகவல் மருத்துவர்கள் மத்தியில் மீண்டும் அதிர்ச்சியையும்,  கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.