தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் காவல்துறையினர் பெரும்பான்மையானோர் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பணி நிமித்தம் மட்டுமில்லாது தங்கள் சொந்த வேலைக்காக செல்லும் போதும் சில காவலர்கள் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் இது சம்பந்தமாக பேருந்து நடத்துனருக்கும் காவலர்களுக்கும் வாக்குவாதங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.

கடந்த வாரம் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தலைமை காவலர் ஒருவர் அரசு பேருந்தில் பயணம் செய்தார். அப்போது அவர் டிக்கெட் எடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும் நடத்துனர் மற்றும் ஓட்டுனருடன் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தில் மன ரீதியாக பாதிக்கப்பட்ட ஓட்டுநர் கோபிநாத் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கிறார்.

இந்த நிலையில் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதி இருக்கிறதா என்று சுப்பிரமணியன் என்பவர் ஈரோட்டில் இருந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதியளித்த தமிழ்நாடு காவல்துறை பணியமைப்புக்கான தலைவர், தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அரசு பேருந்துகளில் பணி நிமித்தம் தவிர்த்து தங்கள் சொந்த வேலைகளுக்காக பயணம் செய்யும் போது கட்டாயம் பயண சீட்டு பெற வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

மேலும் பணி நிமித்தமாக பயணம் செய்ய நேரிடும் போதும் முறையான பஸ் வாரண்ட் இருந்தால் மட்டுமே இலவச பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.