திருவேற்காட்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

சென்னை கொரட்டூர் போலீசார், ரவுடியும் பழைய குற்றவாளியுமான ராஜேஷை பல ஆண்டாக தேடி வந்தனர். இந்நிலையில் திருவேற்காடு பகுதியில் ராஜேஷ் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று காலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது, சின்ன கோலடி பகுதியை சேர்ந்த கோபி என்பவரது வீட்டில் 3 டன் செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

இதையடுத்து அங்கிருந்த கோபியை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், கோபியின் நண்பரான ரவுடி ராஜேஷ், கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் செம்மரக்கட்டைகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து கோபியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான ராஜேஸை போலீசார் தேடி வருகின்றனர். இச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.