ரெயிலில் சிக்க இருந்த நபர்... சாமர்த்தியமாக இழுத்துப்பிடித்து காப்பாற்றிய பெண் போலீஸ்..!
ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரெயிலின் கீழ் விழ இருந்த நபரை சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
சமூக வலைதள பயன்பாடு அதிகரித்து வருவதை அடுத்து, பல்வேறு வீடியோக்கள் மக்கள் மத்தியில் அதிகம் பரவி வைரல் ஆகி வருகின்றன. வைரல் ஆகும் வீடியோக்கள் பெரும்பாலும், ஸ்மார்ட்போன் அல்லது சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளாகவே இருக்கும். யாரும் எதிர்பாராத நிலையில், சட்டென நடந்தேரும் சம்பவங்கள் எப்படியோ வீடியோவாகி, வைரல் லிஸ்டில் இடம்பெற்று விடுகிறது.
அந்த வரிசையில், ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவர் ரெயிலின் கீழ் விழ இருந்த நபரை சாமர்த்தியமாக செயல்பட்டு காப்பாற்றிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. இதுபற்றிய வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
வைரல் வீடியோ:
கடந்த ஞாயிற்று கிழமை இரவு சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பயணி ஒருவர் ரெயிலில் இருந்து கீழே இறங்க முற்பட்டார். ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய போது திடீரென அந்த நபர் நிலை தடுமாறி ரெயிலில் இருந்து கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி, இமைக்கும் நொடியில் அதிரிடியாக செயல்பட்டு, ரெயிலில் சிக்க இருந்த நபரை வெளியே இழுத்து நடைமேடைக்கு கொண்டு வந்தார்.
இந்த சம்பவங்கள் ரெயில் நிலையத்தில் வைக்கப்பட்டு இருந்த சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருக்கிறது. பின்னர் இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கன நேரத்தில் ரெயிலின் கீழ் விழுந்த நபரை காப்பாற்றிய பாதுகாப்பு அதிகாரியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
அசாத்திய பெண்:
ரெயில் தண்டவாளத்தில் மக்கள் சிக்கிக் கொள்வது, அதில் இருந்து தப்பித்து விடும் அதிர்ச்சி வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது சாதாரன விஷயமாகி விட்டது. இவ்வாறு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வீடியோ வெளியானது. அதில் பெண் ஒருவர் தண்டவாளத்தை போன் பேசிக் கொண்டே கடக்க முயறி செய்கிறார். அப்போது தண்டவாளத்தில் சரக்கு ரெயில் வந்தது. அதை பார்த்ததும் அந்த பெண் தண்டவாளத்தில் படுத்து விடுகிறார்.
ரெயில் அருகில் வருவதை பார்த்தும், அங்கிருந்து அசையாமல் அப்படியே படுத்திருக்கிறார். பின் வேகமாக வந்த ரெயில் அந்த பெண்ணை கடந்து செல்கிறது. ரெயில் சென்றும் அந்த பெண் எவ்வித காயமும் இன்றி தண்டவாளத்தில் இருந்து எழுந்த பெண் தொலைபேசியில் பேசிக் கொண்டே அங்கிருந்து கிளம்பி சென்றார்.