தமிழகம் முழுவதும் கைது செய்யப்படும் ரவுடிகள், செயின் பறிப்பாளர்களின் கைகள் உடைக்கப்பட்டிருப்பது போல் வெளியாகும் புகைப்படங்களின் நம்பகத்தன்மை குறித்தது கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் செயின் பறிப்பவர்களை கைது செய்து அவர்களை பாத்ரூமில் வழுக்கி விழச் செய்து கை கால்களை உடைக்கும் வழக்கம் அறிமுகமானது. தொடர்ந்து குற்றச்செயலில் ஈடுபட்டு கைதாகி சிறை சென்றாலும் ஜாமீனில் வந்த பிறகு மீண்டும் அதே குற்றங்களில் ஈடுபடுபவர்களை பிடித்து போலீசார் கைகளை உடைத்துவிட்டு அதனை பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டார்கள் என்று கூறுவதாக ஒரு புகார் எழுந்ததது.

சென்னையின் இந்த கலாச்சாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ளது. செயின் பறிப்பு, ரவுடித்தனம், மிரட்டல், கொலை போன்ற வழக்குகளில் கைதாகும் நபர்கள் தான் அதனை செய்துள்ளார்கள் என்று தெரிந்தால் அதாவது சிசிடிவி ஆதாரம் கிடைத்தால் அவர்களை போலீசார் கட்டாயம் பாத்ரூமில் வழுக்கி விழச் செய்தனர். இதனால் மறுநாள் அவர்கள் கைகளில் கட்டுப்போட்டபடி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

சில வழக்குகளில் 5 பேர் முதல் 6 பேர் வரை கூட பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக சொல்லப்பட்டது. இதனிடையே கடந்த வாரம் நெல்லையில் இதே போல் சிலருக்கு மாவுக் கட்டு போட்டதாகவும் அவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் போலீசார் தற்போது உண்மையில் கைகளை உடைக்காமல் வெறும் மாவுக்கட்டு மட்டும் போட்டு அவர்களை அனுப்பிவிடுவதாகவும், இதன் மூலம் மற்றவர்களுக்கு ஒரு பயம் ஏற்படும் என்று இப்படி செய்வதாகவும் சொல்கிறார்கள்.

முதலில் ஆர்வத்துடன் கைகளை உடைத்த சில போலீசார் தற்போது கைகளை உடைக்க வேண்டும் என்றால் தயங்குவதாக சொல்கிறார்கள். எனவே தான் இப்படி கைகளை உடைக்காமலேயே உடைத்ததாக மாவுக்கட்டு போட்டு பிரச்சாரம் நடைபெறுவதாக சொல்கிறார்கள்.