சென்னை திருவொற்றியூரில் ஏடிஎம் மெஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவொற்றியூர் மேற்கு மாட வீதியில் பாங்க் ஆப் பரோடா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இங்கு, பணம் எடுப்பதற்காக ஒருவர் சென்றபோது, ஏடிஎம் மெஷின் உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி உடனடியாக திருவொற்றியூர் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏடிஎம் மையத்தில் ஆய்வு செய்தனர். தகவலறிந்து, வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

முதற்கட்ட விசாரணையில், நள்ளிரவில் ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்மநபர்கள், மெஷினை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். ஆனால், முடியாததால் அங்கிருந்து தப்பி சென்றனர் என்பது தெரியவந்தது.

இதுபற்றி வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.