திருத்தணியில் லேப்டாப் வழங்க கோரி  மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளியில், கடந்த 2017–-18ம் ஆண்டு பிளஸ்2 படித்த மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கவில்லை. ஆனால் நடப்பாண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மடிக்கணினி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று மதியம் 2017 - 18 கல்வி ஆண்டில் அப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் அரசினர் ஆண்கள் மேனிலைப் பள்ளி இருக்கும் காந்தி சாலையில் திரண்டு லோப்–டாப் வழங்கக் கோரி மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியல் செய்த மாணவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தனர். அதை ஏற்று போராட்டத்தை கைவிட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.