ஒரகடத்தில் இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரத்திலிருந்து தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று நேற்று இரவு வண்டலூர் வாலாஜாபாத் சாலை வழியாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஒரகடம் அருகே செல்லும்போது ஒரே இருசக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர். இவர்கள் சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது.  

இதில், இருசக்கர வாகனம் பேருந்து அடியில் சிக்கிக்கொண்டு 100 மீட்டர் தூரத்துக்கு இழுத்து செல்லப்பட்டது. டயரில் அடியில் சிக்கி திருநெல்வேலியை சேர்ந்த ரித்திஷ் (25), டெல்லியை சேர்ந்த சந்திரஜித் (25) 2 இளைஞர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிவகங்கையை சேர்ந்த வினோத்தை (27) அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி வினோத்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பேருந்து ஓட்டுநரை போலீசார் தேடிவருகின்றனர்.