கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அரசு பிறப்பித்த உத்தவை மீறி செயல்பட்ட முகலிவாக்கத்தில் ஐடி நிறுவனத்திற்கும் மாநகராட்சி அதிகனாரிகள் சீல் வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், தியேட்டர்கள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் மையங்களை மார்ச் 31-ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பல ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், சில ஐடி நிறுவனங்களில், ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். 

இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நிலையில். போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் உள்ள ஐடி நிறுவனத்தில் பெருநகர மாநகராட்சி வளசரவாக்கம் 11-வது மண்டல சுகாதார துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த நிறுவனத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வந்ததால், அவர்களை வெளியேற்றி வீட்டில் இருந்து பணிபுரியும்படி ஐடி நிர்வாகத்திற்கு சுகாதார துணை அதிகாரிகள் அறிவுறுத்தினர். 

ஆனால், ஐடி நிறுவனங்களை மூட வேண்டும் என அரசு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
இதனையடுத்து, ஐடி நிறுவனத்தின் நுழைவாயிலின் இரும்பு கதவுகளை மூடி சீல் வைத்தனர். பின்னர் குறைந்த ஆட்களை வைத்து பணிபுரிவதாக சாப்ட்வேர் நிறுவனம் சார்பில் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து சீல் அகற்றப்பட்டது. ஏற்கனவே தமிழக அரசு உத்தரவை மீறி செயல்பட்டு வந்த புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ்க்கு அதிகாரிகள் சீல் வைத்தது குறிப்பிடத்தக்கது.