அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வந்த புகாரை தொடர்ந்து அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கடைகளில் செயல்படும் ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலை நிர்ணயம் செய்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த விலையை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறநிலையத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் 40 ஆயிரம் கோயில்கள் உள்ளது. இதில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில் உட்பட 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதான கோயில்கள் அடக்கம். இந்த கோயில்களுக்கு வெளியூர், வெளிமாநிலங்களில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.

இதை தவிர்த்து முக்கிய விசேஷ நாட்களில் இந்த கோயில்களில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இது போன்ற கோயில்களில் பூஜை பொருட்கள், பிரசாத பொருட்கள் கூடுதல் விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த ேகாயில்களில் பூஜை மற்றும் பிரசாத பொருட்களின் விலை நிர்ணயம் செய்து ஏற்கனவே அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.

அதே நேரத்தில் கோயில்களுக்கு சொந்தமாக கடைகளில் ஓட்டல் நடத்தி வருபவர்கள் அதிக விலைக்கு உணவு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக பக்தர்கள் தரப்பில் அறநிலையத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இந்த புகாரின் பேரில் அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கடைகளில் செயல்பட்டு வரும் ஓட்டல்களுக்கு மட்டும் விலை நிர்ணயம் செய்துள்ளது.

அதன்படி, இட்லி 1 (100 கிராம்) ரூ.8, பொங்கல் 200 கிராம் ரூ.20, கிச்சடி 200 கிராம் ரூ.20, பூரி கிழங்கு ஒரு செட் (2 எண்ணிக்கைகள்)ரூ.25, ஊத்தப்பம் ரூ.25, வெங்காய ஊத்தப்பம் ரூ.235, சாதா தோசை ரூ.20, மசால் தோசை ரூ.25, சப்பாத்தி குருமா (2 எண்ணிக்கைகள்) ரூ.20, மெதுவடை, பஜ்ஜி, போண்டா, மசால் வடை ஒன்று ரூ.8, சுண்டல் ரூ.12, வெஜிடபிள் சாதம் ரூ.22, சாம்பார் சாதம் ரூ.22, தயிர் சாதம் ரூ.22, தக்காளி சாதம் ரூ.22, லெமன் சாதம், புளியோதரை ரூ.22, காபி 1 கப் ரூ.8, தேநீர் 1 கப் ரூ.8, சாப்பாடு (கூட்டு, பொறியல், அப்பளம், ஊறுகாய், சாம்பார், காரக்குழம்பு, ரசம், மோருடன்) ரூ.40 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை காட்டிலும் அந்த கடைகளில் நடத்தப்படும் ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால், அந்த கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அறநிலையத்துறை எச்சரிக்ைக விடுத்துள்ளது.