சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த நரம்பியல் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள 2 தனியார் மருத்துவமனையில் நிர்வாக இயக்குநராக இருந்த 55 வயது நரம்பியல் மருத்துவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு வானகரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே அவருக்கு சிறுநீரக கோளாறு காரணமாக டயாலிசிஸ் உள்ளிட்ட சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வந்தன. இதனிடையே, கொரோனா தாக்கத்தால் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். 

இந்நிலையில், கொரோனாவுக்கு தமிழகத்தின் முதல் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவரது உடலை அடக்கம் செய்ய அண்ணா நகர் வேலங்காடு பகுதியினர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களில் சிலர் கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கியதில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளரும் காயமடைந்தனர். இதனையடுத்து, பாதுகாப்புபடையினர் வரவழைக்கப்பட்டு அவர்களது உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது. 

முன்னதாக, கடந்த வாரம் வானகரம் தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த நெல்லூர் மருத்துவரின் உடலை தகனம் செய்ய இருவேறு இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவரது உடல் போரூர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.