சென்னையில் அறிமுகமாகி உள்ள பைக் டாக்சியான ராபிடோவில் பணிக்கு சேர்ந்துள்ள சில இளைஞர்கள் சவாரிக்கு அழைக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.  

சென்னையில் கால்டாக்சி, ஆட்டோவுக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது பைக்டாக்சி. கார்களில் பயணம் செய்யும் மக்கள், வழிநெடுக போக்குவரத்து நெரிசலால் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பிட்ட இடத்திற்கு வேகமாக செல்ல வேண்டுமென நினைக்கும் இவர்களுக்கு போக்குவரத்து நெரிசல் இடையூறாய் உள்ளது. இந்த பிரச்சனைக்கு வழிகண்டு, அதனை வருமானம் ஈட்டும் சேவையாக மாற்றியுள்ளது ராபிடோ நிறுவனம்.

ராபிடோ (Rapido) என்ற பைக் டாக்ஸி செயலியை பதிவிறக்கம் செய்து, வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார்? எங்கு செல்ல வேண்டுமென பதிவிட்டால்... அடுத்த சில நிமிடங்களில் இருசக்கர வாகனம் ஓட்டுனருடன் வந்து நிற்கும். குறைந்தபட்ச கட்டணம் மூன்று கிலோ மீட்டருக்கு 15 ரூபாய். அடுத்தடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 3 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறது. கட்டணம் குறைவு, எளிதாகவும், வேகமாகவும் பயணிக்கலாம் என்பதால் மக்கள் மத்தியில் இந்த சேவை பிரபலமடைந்து வருகிறது. இருசக்கர வாகனம் இருந்தால் வேலையும், ஊதியமும் உறுதி என்பதால், முழுநேரமாகவும், பகுதி நேரமாகவும் இந்த வேலையை பார்க்க இளைஞர்கள் விரும்புகின்றனர்.

இந்நிலையில், சவாரிக்கு அழைக்கும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு மிரட்டல் விடுப்பது அதிகரித்து வருவதாக வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அப்படி கேட்ட தொகையை வாடிக்கையாளர்கள் கொடுக்க மறுத்தால் தங்களது செல்போன் எண்ணுக்கு நண்பர்களை வைத்து போன் செய்து குடும்பத்தையே கடுமையாக வசைப்பாடுவதாக ராபிடோ பயணி புகார் தெரிவித்துள்ளார். மேலும், ராபிடோ இளைஞர்கள் பயணத்துக்கு அழைத்துவிட்டு ரத்து செய்யும் நபர்களின் செல்போன் நம்பரை 10-க்கும் மேற்பட்ட தங்களது நண்பர்களுக்கு அனுப்பி வைத்து, பயணத்தை ரத்து செய்தவரை இரவு முழுவதும் செல்போனில் கலாய்ப்பதை பொழுதுபோக்காக செய்துவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இவர்களிடம் சிக்கி தூக்கத்தையும் மன நிம்மதியையும் இழந்த ராபிடோ பயணியான கெவின் என்பவர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையில் அவரை மிரட்டியது ராபிடோ கேப்டனான ஆனந்த் மற்றும் அவரது நண்பர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். சில நேரங்களில் ராபிடோ பைக் டாக்சியை நம்பி இளம் பெண்கள் பயணம் செய்வதால் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை காவல்துறையினர் உடனே தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஏற்கனவே பைக் டாக்ஸி புக் செய்த இளைஞரை காரில் கடத்திச்சென்று, கத்திமுனையில் நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்து பணம் பறித்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு சம்பவம் அரங்கறேியுள்ளது.