தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரம்ஜான் தொழுகைகளை வீடுகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என தலைமை காஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 4ம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மே 25ம் தேதியன்று இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை அன்று அனைத்து இஸ்லாமியர்களும் மசூதிகளுக்கு சென்று தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் எந்தவொரு வழிபாட்டு தலமும் திறக்கப்படவில்லை. இருந்தாலும், ரம்ஜான் தொழுகைக்காக மசூதிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு இஸ்லாமியர்கள் மத்தியில் நிலவி வந்தது. 

இந்நிலையில், தமிழகத்தில் வருகிற 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகை தொழுகையை பள்ளிவாசல் அல்லது திடல்களில் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே இஸ்லாமிய பெருமக்கள் ரம்ஜான் பண்டிகை தினத்தில், தங்களது ரம்ஜான் பெருநாள் தொழுகையை தங்கள் வீடுகளிலேயே நிறைவேற்றும்படி கேட்டுக்கொள்கிறேன் என அரசு தலைமை காஜி சலாஹீதீன் முகமது அயூப் கூறியுள்ளார்.