ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினிக்கு அளிக்கப்பட்ட பரோலை 3 வாரங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது, மனித வெடிகுண்டு மூலம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். 28 ஆண்டுகால சிறை தண்டனையில் இருந்து தங்களை இவ்வழக்கில் விடுதலை செய்ய கோரி 7 பேரும் பல்வேறு முற்சிகளை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில், நளினியின் மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய பரோல் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி மனு அளித்திருந்தார். அதன்படி கடந்த 5-ம் தேதி நிபந்தனைகளுடன் நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 25-ம் தேதி 30 நாட்கள் பரோலில் சிறையில் இருந்து நளினி வெளியே வந்தார். இவருக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது. 

இந்த சூழலில் மகளின் திருமண ஏற்பாடுகளை முடிக்க முடியவில்லை என்று கூறி, பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க தமிழக அரசு, சிறைத்துறையிடம் கோரியிருந்தார். ஆனால், அவர்கள் கோரிக்கையை நிராகரித்தனர். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார். இதற்கு தமிழக அரசும், சிறைத்துறையும் பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு ஆகஸ்ட் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், நளினிக்கு மேலும் 3 வார காலம் பரோல் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஏற்கனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை பின்பற்றவும் நளினிக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.