குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும் - சுஜித் மரண செய்தி கேட்டு வேதனையடைந்த ரஜினி...

சிறுவன் சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரிட்டோ ஆரோக்கியதாஸ் - கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகன் சுஜித். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். சிறுவனை மீட்க 5 நாட்களாக எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் பொய்யாய் போக, சுமார் 82 மணி நேரத்திற்கு பிறகு சுஜித்தின் உடலை மட்டுமே மீட்பு படையினரால் மீட்க முடிந்தது. சுஜித்தின் மரணம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 
ஏதாவது அதிசயம் நிகழாதா?, சுஜித் மீண்டு வந்துவிடமாட்டானா? என தமிழக மக்கள் பிரார்த்தனை செய்தனர். சுஜித்திற்காக தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவது சாதி, மத பேதமின்றி பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. இருப்பினும் சுஜித்தின் மரண செய்தி தமிழக மக்களை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில், ”சுஜித்தின் மரணம் மனதிற்கு மிகவும் வேதனையளிக்கிறது, அந்த குழந்தையின் ஆத்மா சாந்தியடையட்டும். சுஜீத்தின் பெற்றோருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்” என மிகுந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.