தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களிலும் பலத்த மழை வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் பல இடங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இந்தநிலையில் அடுத்த வரும் இரண்டு நாட்களுக்கு மழையின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து கூறிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆந்திர கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதன்காரணமாக அடுத்து வரும் இரண்டு தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த இரு நாட்கள் பெய்த மழையின் அளவை விட குறைவாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வந்ததை அடுத்து முக்கிய அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேட்டூர் அணை இந்த வருடத்தில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.