தமிழகத்தில் இரு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்த நிலையில், பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது. இந்நிலையில் இப்போது வெய்யில் வெளுத்து வாங்கி வருகிறது. 

உசிலம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, அப்பகுதி ஓடைகளில் 20 ஆண்டுகளுக்கு பிறகு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தப்பநாயக்கனூர், மெய்யணம்பட்டி, செல்லம்பட்டி, கருமாத்தூர், சேடபட்டி, எழுமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் அப்பகுதியில் தடுப்பணைகள் நிரம்பி, ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் தும்பைபட்டி, மேலவளவு, உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இருதினங்களாக மாலை வேளையில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மழையின் காரணமாக, குளிர்ந்த காற்று வீசுவதால், அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சுமார் 3 மணி நேரத்திற்க்கும் மேலாக மழை பெய்ததால், ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே குமுளி- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் வெள்ளம்போல தேங்கியது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்றிரவு கனமழை பெய்தது. ஒருமணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. இதேபோன்று புளியங்கோம்பை, பெரியகுளம், சிக்கராசம்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரியில் 24 மணி நேரம் பெய்த தொடர் மழையால் ஒரு ஆண்டுக்குப் பின் மார்கண்டேயன் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கால்வாய் வழியாக படேதலாவ் ஏரிக்கு தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது. தொடர்ந்து மழை பெய்தால், 163 ஏக்கர் பரப்பளவ கொண்ட படேதலாவ் ஏரி, நிரம்பும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.

 

ஆம்பூர் அருகே பெய்த கனமழையால், மிட்டாளம் பகுதி காப்புகாட்டில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில், அப்பகுதியில் உள்ள கோழிப்பண்ணை மூழ்கியதால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் இறந்தன. இழப்பை ஈடுசெய்ய அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோழிபண்ணை உரிமையாளர் யுவராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் வெய்யில் கொளுத்தி எடுப்பதால் இன்று மாலை கடும் மழை பெய்யக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது,.