தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16 ம் தேதி தொடங்கியது. இதன்காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை வந்தது. இந்தநிலையில் அரபிக்கடலில் உருவாகிய புயலால் தமிழகத்தில் நிலவிய ஈரப்பதம் ஈர்க்கப்பட்டு கடந்த சில நாட்களாக மழையின் தீவிரம் வெகுவாக குறைந்தது.

இதனிடையே தாய்லாந்து நாட்டின் கடல்பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை புயலாக உருவாகி இருக்கிறது. வானிலை மையம் அதற்கு 'புல்புல்' என பெயர் சூட்டியுள்ளது. அது தற்போது தீவிரமடைந்து வருகிறது. எனினும் புல்புல் புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, வட அந்தமான் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் ‘புல்புல்’ புயல் அடுத்த 24 மணி நேரத்துக்குள் தீவிர புயலாக மாற இருக்கிறது என்றும்  வடக்கு வட மேற்கு திசையில் நகரும் இந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்தை நோக்கி செல்லும் என கூறியுள்ளனர். 

புல்புல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய உள் மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: ஒன்றரை லட்சத்திற்கு விற்கப்பட்ட பச்சிளம் ஆண்குழந்தை..! மருத்துவ பரிசோதனையில் சிக்கிய வயதான தம்பதியினர்..! பரபரப்பு தகவல்கள்..!