வெப்பச்சலனம் காரணமாக அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வானிலை மைய அதிகாரிகள் கூறும்போது, தாய்லாந்து நாட்டின் வளைகுடா பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் நாளை வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில தினங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு வெப்பச் சலனம் காரணமாக தென் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய வட மாவட்டங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். 

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும்  நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூரில் 3 செ.மீ மழை பெய்துள்ளது.