காலை 10.30.. நேரம் குறித்த நீதிமன்றம்.. அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை வெளியாகிறது..
அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை காலை 10:30க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
கடந்த 2006-2011 ஆண்டு திமுக ஆட்சியின்போது உயர்கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வருமானத்தைவிட ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த எம்.பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோரை கடந்த 2016 ஆம் ஆண்டு விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது 39 சாட்சிகளிடம் மேற்கொண்ட ஆதாரங்களை லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்தது.
பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அமைச்சர் மனைவியின் வருமானத்தை, அவரது வருமானமாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் கணக்கிட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், குறிப்பிட்ட காலகட்டத்தில் பொன்முடி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் அவர் வாதிட்டார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன். அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் விடுவிக்கப்பட்டதை ரத்து செய்து நேற்று (டிசம்பர் 19)உத்தரவிட்டார். பொன்முடி வருமானத்திற்கு அதிகமாக 64.90% சொத்து சேர்த்தது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி ஜெயச்சந்திரன் தெரிவித்தார்.
மேலும், தண்டனை விவரங்களை அறிவிப்பதற்காக வழக்கின் விசாரணையை டிசம்பர் 21 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10.30மணிக்கு ஒத்திவைத்தார். அன்றைய தினம், பொன்முடியும் அவரது மனைவியும் நேரிலோ, காணொலி வாயிலாகவோ ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார்.
அமைச்சர் பொன்முடி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் அவர் தகுதி இழப்பார் என்று வழக்கறிஞர்கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 1996-2001 திமுக ஆட்சியில் போக்குவரத்து அமைச்சராக பொன்முடி இருந்தபோது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.36 கோடி அளவுக்கு சொத்து குவித்ததாக பொன்முடி, விசாலாட்சி உள்ளிட்டோருக்கு எதிராக 2002-ல் அதிமுக ஆட்சியில் ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் இருந்து இருவரையும் வேலூர் முதன்மை அமர்வு நீதிமன்றம் கடந்த ஜூன் மாதம் விடுதலை செய்தது. இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் விதமாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்கிறது. நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இந்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி வழக்கில் தண்டனை விவரம் நாளை காலை 10:30க்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
குறைந்த விலையில் தாய்லாந்தில் நியூ இயர் கொண்டாட ஆசையா..சூப்பரான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்..