ஆயுத பூஜையையொட்டி சாலையில் பூசணிக்காய் உடைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஆயுத பூஜையை முன்னிட்டு கடைகள் வைத்திருப்பவர்கள், வாகனங்களுக்கு பூஜை செய்பவர்கள் திருஷ்டியை கழிக்கும் பொருட்டு, பூசணிக்காயை உடைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். பூசணிக்காயை சாலையின் ஓரத்தில் உடைக்காமல் சாலை நடுவில் ஒருசிலர் உடைத்துவிடுவார்கள். இதனால், சாலையில் வாகனத்தில் செல்வோர் சறுக்கி விழுந்து விபத்தில் சிக்கி உயிரிழப்பு மற்றும் காயமடைகின்றனர். 

இவற்றை தடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ஆயுத பூஜையை முன்னிட்டு, திருஷ்டி பூசணிக்காய் உடைப்பதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால், வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து, விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, பொதுமக்கள் சாலைகளில் பூசணிக்காயை உடைக்க வேண்டாம். பாதுகாப்பான முறையில், தங்களது பூஜைகளை செய்ய வேண்டும். மேலும், சாலையில் பூசணிக்காய் உடைத்து விபத்து ஏற்பட்டால், அதற்கு காரணமானோர் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.