செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், மருந்தாளுநர்கள் குறைவாக உள்ளதால், மாத மாத்திரை வாங்குபவர்கள், மணி கணக்கில் காத்திருந்து கடும் சிரமம் அடைகின்றனா்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் சுமார் 10 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாகவும், புறநோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

மேலும் வலிப்பு, மாரடைப்பு, ரத்த கொதிப்பு, வாதம், மனநோய், இதய, காசநோய் உள்பட பல்வேறு வியாதிகளுக்கு, பொதுமக்கள் மாதந்தோறும் இங்கு வந்து பெற்று செல்கின்றனர். அனைத்து நோய்களுக்கும் ஒரே இடத்தில் மருந்து, மாத்திரைகள் வழங்கப்படுவதால், ஏராளமான நோயாளிகள் அதிகாலை முதல் காத்திருக்கின்றனர்.

மருந்து, மாத்திரைகள் கொடுக்க போதுமான மருந்தாளுநர்கள் இல்லாததால், ஒரு சில மருந்து மாத்திரைகள் இருப்பு இல்லாததாலும், நோயாளிகள் அவற்றை வாங்கி செல்ல பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீ்டித்து வருகிறது.

மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பில் தேவையான அளவு மருந்தாளுநர்களை, மாத்திரைகளை வழங்கும் பணியில் ஈடுபடுத்த வேண்டும். கூடுதல் கவுன்ட்டர்களை திறந்து, பொதுமக்களுக்கு மாத்திரைகளை வழங்கி, பொதுமக்களை காத்திருக்காமல் செய்ய செய்ய வேண்டும் என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், காலை 7.30 மணிமுதல் மதியம் 12 மணிவரை மாத்திரை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வந்தவாசி, சூனாம்பேடு, செய்யூர், உத்திரமேரூர், அச்சிரப்பாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100 கிமீ தூரத்தில் இருந்து அதிகாலையிலேயே வந்து காத்திருக்கிறோம்.

ஆனால் இங்குள்ள ஊழியர்கள், 8.30 மணிக்கு மேல் வந்து மாத்திரைகளை கொடுக்கின்றனர். அதேபோல் 11.30 மணிக்கு மூடிவிடுகின்றனர். அதில் ஒருசில மாத்திரைகள் தருவதில்லை கேட்டால் இருப்பு இல்லை என கூறுகின்றனர்

சில நேரங்களில் மாத்திரையை மாற்றி கொடுத்துவிடுகிறார்கள். படிப்பறிவில்லாத மக்கள் அதை வாங்கி சென்று, பயன்படுத்தி வேறு நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கூடுதல் மருந்தாளுநர்களை நியமித்தால், இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாது. அனைத்து மருந்து, மாத்திரைகளும் வழங்க வேண்டும் என்றனர்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமையில் மாதந்தோறும் மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கு, பெரும்பாலும் முதியோர்களே வருகின்றனர். அதிகாலை முதல் அவர்கள் காத்திருப்பதால் கடும் சிரமம் அடைவதுடன், வெயில் தாக்கத்தில் மயக்கமடையும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. அதேபோல் பெண்களும் கடும் அவதியடைகின்றனர். இதனால் கூடுதல் கவுன்ட்டர்களையும், மருந்தாளுநர்களையும் நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.