சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்திலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது.  இதுவரை சென்னையில் மட்டும் 570 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கோயம்பேடு சந்தையில் வியாபாரம் செய்த 54 வயது பூக்கடைக்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவரின் குடும்பம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. மேலும் தனிமைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. கோயம்பேடு மார்க்கெட் சென்ற பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

இதையடுத்து நடமாடும் வாகனம் மூலம் கோயம்பேடு சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுவரை 3 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதால் கோயம்பேடு சந்தை மூடப்படுவதாக தகவல் வெளியாகியது. இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் செயல்பட்டு வந்த பூ மற்றும் பழ சந்தை மாதவரத்திற்கு மாற்றப்படுவதாக சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த சி.எம்.டி.ஏ செயலாளர் கார்த்திகேயன் கூறியதாவது:- கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை முழுமையாக நிறுத்தி வைக்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனை மட்டுமே நடைபெறும், பொதுமக்கள் சந்தைக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.  சில்லறை வியாபாரிகள் அதிகாலை முதல் காலை 7.30 மணி வரை மட்டுமே காய்கறிகளை வாங்க அனுமதிக்கப்படும். நாளை மறுநாள் முதல் மறு அறிவிப்பு வரும் வரை மாதவரம் பேருந்து நிலையத்தில் பூ மற்றும் பழச்சந்தை இயங்கும்  என்று தெரிவித்துள்ளார்.