15 ஆண்டுகளாக ஓய்வூதியம் இன்றி சத்துணவு, அங்கன்வாடி மைய பணியாளர்கள் மற்றும் மகளிர் நல அலுவலர், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்கள் ஆகியோருக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சம் பேர் சத்துணவுத் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், அங்கன்வாடி பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக மாற்றுவதற்கான நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் சத்துணவு திட்டத்தில் பணியாற்றிய பி.எட் பட்டம் பெற்றவர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம மூலம் சிறப்புத்தேர்வு நடத்தி, தகுதியானவர்களான 880 பேர் பட்டதாரி ஆசிரியர்களாக அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட்டனர்.

அங்கன்வாடி பணியாளர்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிந்து சமூக நலத்துறையில் நிலை 2 மகளிர் ஊர் நல அலுவலர் மற்றும் சமுதாய ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்களாக பணி மூப்பு அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்பட்டது. இவ்வாறு 25 ஆண்டு காலம் சத்துணவு திட்டத்தில் பணியாற்றி 1.4.2003க்கு பின்னர் அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டவர்கள், மிக குறைந்த ஆண்டுகளே அரசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்கள்.

இவ்வாறு அரசு பணி நியமனத்தை பெற்று குறைந்த காலங்களே பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள இவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. இப்பணிக்கு வராமல் சத்துணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டங்களிலேயே ெதாடர்ந்து பணியாற்றி இருந்தால், மாத ஓய்வூதியம் ₹2 ஆயிரம், பணிக்கொடை ₹1 லட்சம் பெற்று தங்கள் ஓய்வு காலத்தை கழித்து கொண்டிருப்பார்கள். ஆனால், அரசு பணி நியமனம் என்று பெருமைக்காக குறைந்த காலமே பணியாற்றி ஓய்வு பெற்று 15 ஆண்டுகளாக ஓய்வூதியம் எதுவுமின்றி பலர் வறுமையில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

தங்களுக்கு ஓய்வூதியம் வேண்டும் என இவர்கள் உண்ணாவிரதம், பேரணி, மாநாடுகள் நடத்தி அரசின் கவனத்துக்கு தங்கள் குறைகளை கொண்டு சென்றும், இன்னமும் அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைப்பதற்கான வழி பிறக்கவில்லை. இதற்கிடையில் மேற்கண்ட ஆசிரியர்கள் மற்றும் ஊர்நல அலுவலர், மேற்பார்வையாளர்களுக்கு சத்துணவு பணிக்காலத்தை 50 சதவீதம் அரசின் நிரந்தர பணிக்காலத்துடன் கணக்கிட்டு, ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது.

எனவே, நீதிமன்ற தீர்ப்பை மதித்து சத்துணவு திட்டத்தில் 25 ஆண்டுகளாக பணியாற்றி அரசின் நிரந்தர பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மகளிர் ஊர்நல அலுவலர், ஊட்டச்சத்து மேற்பார்வையாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் தமிழகமெங்கும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் தமிழக அரசு செயல்படுத்தும் தாலிக்கு தங்கம் திட்டம், கர்ப்பிணிகள், விதவைகள், கணவனால்கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கு அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியை மேற்கொள்பவர்கள்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போஷாக்கு ஊட்டச்சத்து உணவு அளிப்பது, சத்து மாத்திரை, நோய் தடுப்பு மாத்திரைகளை வழங்குவது, கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு, அரசின் திட்டங்களை செயல்படுத்துவது இவர்களின் பணியாகும். இவர்கள் தமிழகம் முழுவதும் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தில் பணி மேற்கொள்வார்கள்.