ஊரடங்கு உள்ள நேரத்தில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து  அதை பார்த்து பகிர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்களது விபரங்கள் சேகரிக்கப்பட்டு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ரவி எச்சரித்துள்ளார்.

சமீபகாலமாக பெண்கள், சிறார்களின் மீதான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. இதற்கு ஆபாச வீடியோ பார்ப்பதும் ஒரு  காரணமாக இருப்பதாக கருத்து நிலவி வந்தது. இதனை தடுக்கும் விதமாக ஆபாச இணையதளங்களை தடை செய்யப்பட்டது. ஆனாலும், சில இணைய டெக்னிக்களை பயன்படுத்தி ஆபாச படங்களை பார்ப்பதும், பகிர்வதும் தொடா்ந்து வந்தன.

இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறாா்களுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., ரவி, சிறாா்கள் தொடா்பான ஆபாச படம் மற்றும் வீடியோ பார்த்தவா்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து, சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்ததாக, இந்தியாவில் முதல் முறையாக, திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபா் என்பவன் கைது செய்யப்பட்டார். அடுத்து, கைது நடவடிக்கையால் ஆபாச படங்கள் பதிவிறக்கம் மற்றும் பார்ப்பவர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. 

இந்நிலையில், கொரோனா தொற்றுக்காக ஊரடங்கு கடைபிடிக்கப்படும் நிலையில் ஆபாச வலைதளம் பார்ப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகயுள்ளது. குடும்ப வன்முறையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு ஆபாச வலைதளங்களை பார்ப்போரில் குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாச வலைதளங்களை பார்ப்பது தெரியவந்துள்ளது. அவர்களது விவரங்களை சைபர் போலீஸார் சேகரித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டிஜிபி ரவி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- ஊரடங்கு சமயத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் செய்யக்கூடிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 25 போன் கால்கள் வருகின்றன எங்களுக்கு. அதில் இதுவரை 9 பேர் மீது கைது நடவடிக்கை எடுத்துள்ளோம். மற்ற பல பிரச்சினைகள் ஆலோசனை அறிவுரை மூலமும் தீர்த்து வைத்துள்ளோம்.

இந்த நேரத்தில் இன்னொரு முக்கிய விஷயம் ஒன்று வெளிவந்துள்ளது. அது ஊரடங்கு நேரத்தில் குழந்தைகளை காட்சிப்படுத்தும் ஆபாசப்படங்கள் அதிக அளவில் பதிவிறக்கம் செய்து பார்ப்பதாக புள்ளிவிவரம் வந்துள்ளது. இது சம்பந்தமாக எங்களது விசாரணையை முடுக்கி விட்டுள்ளோம். எனவே குழந்தைகள் சம்பந்தமான ஆபாச பதிவிறக்கம் செய்து பார்த்து, பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி. ரவி எச்சரித்துள்ளார்.